18

siruppiddy

திங்கள், 3 ஜூன், 2013

உறவுகளை தேடி,,,.

தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பம் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புக்காக வேறு நாட்டுக்கு செல்பவர்கள் அங்கு சென்றபின் அங்குள்ள வாழ்க்கை முறை, உழைப்பு போன்றவை படிப்படியாக தாய்மண்ணை, உறவினர்களை இந்த வேகாமான யுகத்தில் மறக்க வைத்துவிடுகிறது. ஆனால், கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம் போய் மூன்று தலைமுறைகளை கடந்து, மொழியை மறந்த தமிழ் குடும்பம் ஒன்று தன் முன்னோர்கள் பிறந்த பூர்வீக வேர்களை தேடி தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தன் உறவுகளை கண்டறிந்ததோடு அவர்களோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமமே உறவுகளை தேடி வரும் குடும்பத்தை வரவேற்க உற்சாகமாக காத்திருந்தார்கள். காரில் இருந்து 60 வயது முத்துகிருஷ்ணன் 55 வயது மாரியம்மா மாரியம்மாவின் பாட்டி 70 வயது மீனாட்சியம்மாள் இறங்கியதும்மே வானவேடிக்கை வெடித்து மேளதாளம் முழங்க இளைஞர்கள் மாலைகள் சூட்ட குழந்தைகள் ரோஜாப்பூக்களை தர பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற அன்பை கண்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டனர். கிராம மக்கள் பேசிய தமிழ் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் பேசிய ஆங்கிலம் இவர்களுக்கு புரியவில்லை. மீனாட்சியம்மாள் மட்டும் சிலச்சில தமிழ் வார்த்தைகளில் பேச எல்லோருக்கும் சந்தோஷமாகி கைதட்டி மகிழ்ந்தனர். கிராமத்தில் இருந்த கோயில்களுக்கு நடக்க வைத்து அழைத்து சென்றனர். அப்போது முத்துகிருஷ்ணன் இந்த தெருவுல எங்க தாத்தா விளையாடியிருப்பாரு தானே என உதவிக்கு இருந்த பேராசிரியர் பரணீதரனிடம் கேட்க அவர் ஆமாம் என தலையாட்டியதும் உணர்ச்சி வசப்பட்டு தரையை தொட்டு வணங்கினார். கோயிலுக்கு சென்றனர். கோயில் உள்ளே நுழைந்ததும் இது எங்க தாத்தா வணங்கன கோயிலா எனகேட்டு வணங்கினார்முன்னால் இராணுவ வீரரான இராமச்சந்திரன் எங்க கொள்ளு தாத்தாவோட அத்தை பையன் பச்சமுத்து அவர்க்கு கல்யாணம் செய்து வச்சியிருக்காங்க. அவருக்கு பூவாசை இராஜமாணிக்கம்ன்னு இரண்டு பசங்க. இங்க அப்ப வறுமை அதிகமாக இருந்ததால ரொம்ப கஸ்டப்பட்டாறாம். அந்த நேரம் நம்ம நாட்ட ஆண்ட வெள்ளைக்காரங்க பினாங்கு, மலேசியா, தென்ஆப்ரிக்கா நாடுகளுக்கு வேலைக்கு அழைச்சிம் போயிருக்காங்க. வறுமையில இருந்தாலும் திடகாத்திரமா இருந்த பச்சமுத்து கப்பல்ல 1890ல தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்கு போயிருக்காரு. அப்படி போனவர் திரும்பி வரக்காணோம். அவரைப்பத்தி எந்த தகவலையும் காணோம். அவரோட குடும்பம் இங்க ரொம்ப கஸ்டப்பட்டாங்கன்னு எங்க தாத்தா எங்கப்பாக்கிட்ட சொல்லியிருக்காரு. அத எங்கப்பா என்கிட்ட சொன்னாரு. நான் இத எம்புள்ளைங்களுக்கிட்ட சொல்லி வச்சியிருந்தன். இப்ப திடீர்ன்னு ஒரு குடும்பம் நாங்க தான் உங்க சொந்தம்ன்னு வந்து நிக்கறாங்க. தென்னாப்பிரிக்காவுக்கு போன பச்சமுத்து அங்கப்போய் முனுசிங்கற தமிழ் பெண்ண கல்யாணம் செய்துக்கிட்டாராம். அங்க அவருக்கு இரண்டு பசங்க பிறந்துயிருக்காங்க. அவுங்களுக்கு முருகா ராஜான்னு பேர் வச்சியிருக்காரு. அதல ராஜன் பையன் முத்துகிருஷ்ணன் தன்னோட மனைவியோட தென்னாப்பிரிக்காவுலயிருந்து உறவுக்காரங்களை தேடி வர்றதா எங்க ஊர் பேராசிரியர் பரணிதரன் சொன்னாரு அவுங்கள பாத்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு என நெகிழ்ந்தவர்
சென்னையில் தனியார் கல்லூரி வணிகவியல் பேராசிரியர் பரணிதரன் நம்மிடம், முத்துகிருஷ்ணன் தென்னாப்பிரிக்காவுல ஈஸ்ட் வெஸ்ட் புரோவின் அரசாங்கத்தின் ஆடிட்டராகவும் அவரோட மனைவி மாரியம்மா தென்னாப்பிரிக்கா தேசிய வங்கியின் நிர்வாக மேலாளராக இருக்காங்க. ஒரு வருஷத்துக்கு முன்ன இங்க வந்து அவரோட தாத்தா பெயரை சொல்லி விசாரிச்சியிருக்காரு. மொழி பிரச்சனையால கண்டறிய முடியல. போகும்போது விசிட்டிங் கார்டு தந்துட்டு போயிருக்காரு. அத எங்கிட்ட தந்தாங்க. நான் மெயில் மூலமா இவரை தொடர்பு கொண்டு பேசனன். எங்க ஊர்லயிருந்து அவரோட தாத்தாவுக்கு 1910ல நிறைய கடிதங்கள் போயிருக்கு. அத ஸ்கேன் பண்ணி அனுப்பனாரு. அதலயிருந்த எங்க ஊர் ஆர்.சி ஸ்கூல் தலைமையாசிரியர் பெயரை வச்சி பெரியவங்ககிட்ட விசாரிச்சப்ப 120 வருஷத்துக்கு முன்னாடி நிறையப்பேர் வறுமையால கப்பல்ல போனதா சொன்னாங்க. அதப்பத்தின தகவல்களை தேடனப்ப கப்பல் முகவரி கிடைச்சது. அதன் மூலமா பயணம் செய்தவங்க பட்டியலை வாங்கனன். அதல எங்க மருத்துவாம்பாடி கிராமத்தலயிருந்து மட்டும் 42 பேர் தென்னாப்பிரிக்காவுக்கு கரும்புவெட்ட சுரங்கம் தோண்ட போனது தெரிந்தது. இந்தியாவுலயிருந்து 50 ஆயிரம் பேர் அந்த காலகட்டத்தல போயிருக்காங்க. அதல முத்துகிருஷ்ணன் தாத்தா பெயரை வச்சி ஊர்ல விசாரிச்சி அவுங்க உறவுக்காரங்க யாருங்கறத கண்டுபிடிச்சி சொன்னன். அவுங்க சந்தோஷமாகி சந்திக்க வந்துயிருக்காங்க இது ரொம்ப சந்தோஷமாயிருக்கு என்றார்.
தென்னாப்பிரிக்கா தமிழர் முத்துகிருஷ்ணன் நம்மிடம் எங்க தாத்தாவுக்கு தமிழக உறவுகளிடம்மிருந்து வந்த கடிதங்களை பொக்கிஷமா பாதுகாத்துயிருக்காரு. எங்கப்பா அத கடவுளா நினைச்சி வணங்கனாரு. எங்க தாத்தாவுக்கு வந்த கடிதத்தல இருந்த வடாற்காடு ஜில்லா, மருத்துவாம்பாடிங்கற கிராமத்து பெயரை வச்சி கூகுள்ள தேடி கண்டுபிடிச்சி 2011ல இங்க நான் மட்டும் வந்து விசாரிச்சன். யாருக்கும் அதப்பத்தி தெரியல திரும்பி போயிட்டன். பிறகு என்னை பேராசிரியர் பரணீதரன் தொடர்பு கொண்டாரு. என் உறவுக்காரங்க யாருங்கறத கண்டுபிடிச்சி சொன்னாரு. இப்ப அவுங்கள பாத்துட்டன் என் உணர்ச்சிய வார்த்தையால சொல்ல முடியல அந்தளவுக்கு ஆனந்தமாயிருக்கன் என்றார். கிராமத்து மக்களின் அன்பை கண்டு மாரியம்மா பேச முடியாமல் கண் கலங்கியபடியே இருந்தார். மீனாட்சியம்மாள் அறைகுறை தமிழில் நம்மிடம், சொந்தக்காரங்களை பாத்ததுக்கப்பறம் மனசு சந்தோஷமா, தெம்பாயிருக்கு என்றார்.
புகுந்த வீட்டு குல தெய்வம் வேட்டவலம் பூவாத்தம்மன் என உறவுக்காரர்கள் சொல்ல அங்கு சென்று தை பொங்கல் வைத்து கொண்டாடினார்கள் முத்துகிருஷ்ணன் தம்பதியினர். அதற்கடுத்து மாரியம்மாவின் முன்னோர்கள் பூர்வீகம் வேலூர் மாவட்டம் திமிறி பக்கத்தில் உள்ள தட்டாஞ்சாடி என்பதை கண்டுபிடித்து அங்கு சென்று உறவினர்களை பெரும் முயற்சிக்கு பின் தேடி நன்காம் தலைமுறை உறவினர்களோடு விருந்துண்டுள்ளனர். மீனாட்சியம்மாவின் பூர்வீகம் திருவண்ணாமலை அருகேயுள்ள வெறையூர் கிராமம். அவர்களின் உறவினர்களை கண்டறியமுடியவில்லை. அதேபோல் பச்சமுத்துவின் முதல் மனைவியின் பிள்ளைகள் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் குடியேறியுள்ளனர். அவர்களது வாரிசுகளை  சந்திக்க ஷிமோகா சென்ற முத்துகிருஷ்ணன் குடும்பத்தார் தன் தாத்தாவின் முதல் மனைவியின் பேர பிள்ளைகள், அவர்களது பிள்ளைகளை கண்டு ஆனந்தமடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது பூர்வீகம் தமிழகம் என்பதை மட்டும் அறிந்து வைத்துள்ளனறாம். சொந்தவூர் உறவுக்காரர்கள் முன்னோர்கள் யார் என்பதை அறியாமல் உள்ளார்களாம். தென்னாப்பிரிக்கா தமிழ் சங்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அவர்களது ஊர் உறவினர்களை கண்டறிந்து தரும் முயற்சியை எடுக்க போவதாக கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்